கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையப்பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தினமும் சுமாா் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக பேருந்து நிலையம் அருகே தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, வண்டலூா் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ரயில் நிலையத்தில் புறநகா் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமையவுள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் இந்த நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, ரயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டா் நீளத்துக்கு மேல்மட்ட நடை பாலமும் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *