இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் இணைந்து வங்க கடலில் வரும் 15ஆம் தேதி கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அறிவித்துள்ளது. இதற்காக நேற்றிரவு சென்னைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு இன்று இந்திய கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையுடன் இணைந்து கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டு கடற்படை வீரர்கள் இந்தியா வந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு சென்றனர். தற்போது இந்திய கடற்படையுடன் இணைந்து ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையினர் வரும் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வங்க கடலில் ‘சகோஜ்-காஜின்’ என்ற பெயரில் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இதற்காக ஜப்பான் நாட்டில் இருந்து ஜப்பான் நாட்டு கடற்படை துணை கமாண்டர் கிடேயே அனாமிலா தலைமையில், ஜப்பான் கடற்படையினர் ‘இசிகோ’ என்ற கப்பலில் இன்று (திங்கட்கிழமை) இரவு சென்னை துறைமுகம் வருகின்றனர். 12-ந் தேதி (செவ்வாய்கிழமை), இந்திய கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரும் 12-ந் தேதியில் இருந்து 16-ந் தேதி வரை வங்க கடலில் கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்திய கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல், வைஸ் அட்மிரல் பிஸ்டு தலைமை தாங்குகிறார். இந்திய கடற்படை வீரர்கள் ஐ.சி.சி. சமுத்திரா போர்க்கப்பலில் சென்று பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இருநாட்டு கப்பல் படையை வலிமையை அதிகரிக்கவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த கடற்பயிற்சி நடத்தப்படுகிறது.
பயிற்சியின் போது இந்திய கடலோர காவல் படையின் செயல்பாடுகள், கடல் பகுதியில் அவர்களின் நடவடிக்கைகள், எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் விதம் உள்ளிட்டவை குறித்து ஜப்பான் வீரர்களுக்கு நம் நாட்டு வீரர்கள் செய்முறை விளக்கம் அளிக்க உள்ளனர். அத்துடன் சரக்கு கப்பல் ஒன்றை கடத்தல்காரர்கள் கடத்தி செல்வதை, தடுத்து கப்பலை மீட்பது போன்று மாதிரி செயல்முறை விளக்கமும் அளிக்க உள்ளனர்.
சமூக விழிப்புணர்வுக்காக கடற்கரையை சுத்தம் செய்தல், கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து இருநாட்டு வீரர்களும் 2 நாட்டு போர்க்கப்பல்களையும் பார்வையிட உள்ளனர். பின்னர் 16-ந் தேதி ஜப்பான் நாட்டு கடற்படை வீரர்கள் இரவு நாடு திரும்புகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி. சர்மா உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
English Summary : India and Japan Navy force joint training in Bay of Bengal till 16th.