இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் போராடி தோல்வி அடைந்தது.
நேற்று இலங்கை அணிக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி இலங்கையை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 13.5 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாகவும், இந்தியாவின் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் 19வயதுக்குட்டபவர்களுக்காக உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
English Summary: India won the T20 Paytm Trophy against Srilanka and in Under-19 India loses against West Indies in Final.