சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் தீவுத்திடலில் இந்திய சுற்றுலா, தொழில் வர்த்தக பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபெறுவது வழக்கம். சென்னை மக்களை மட்டுமின்றி வெளியூர் மக்களையும் வெகுவாக கவர்ந்து வரும் இந்த பொருட்காட்சி இவ்வருடம் ஆரம்பமாகும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய சுற்றுலா, தொழில் வர்த்தக பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி 2 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இது குறித்து சுற்றுலா வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறையின் அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய மற்றும் மாநில அரசு துறைகளின் அரங்குகளை 7ஆம் தேதிக்குள் அமைக்கவும் பொருட்காட்சியை 2 மாதங்களுக்கு மேல் நடத்துவது என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தீவுத்திடலில் 100க்கும் மேலான கடைகள் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொழுது போக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. பொருட்காட்சி நுழைவு வாயில் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளி குழந்தைகளுக்கு ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொருட்காட்சியை யொட்டி சிறப்பு பேருந்துகள் விட சென்னை மாநகர போக்குவரத்து முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary :Indian Tourism, Industry and Commerce Exposition Starts on January 07th in Chennai.