சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னை ரோட்டரி சங்கமும், அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும் இணைந்து ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி (“ஃபிரிட்ஜ்’) ஆகியவற்றின் தொழில்நுட்பம் குறித்த 6 மாத இலவசப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி குறித்த இலவச பயிற்சியில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்கள் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோருக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இடம் அளிக்கப்படும். 50 மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இதில் சேர விரும்புபவர்கள் “தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், கிண்டி, சென்னை-600025′ என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது குறித்து கூடுதல் தகவல் பெற 044-22358601, 9940514908 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary : Anna University conducts free 6 months training class on AC, Refrigerator.