ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கு தென்னக ரயில்வே ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு கூடுதலாக ரயில்களை இயக்கி வரும் நிலையில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கவுள்ள கூடுதல் ரயில் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் பெட்டிகளின் பற்றாக்குறை போன்ற ஒருசில காரணங்களால், பொங்கல் பண்டிகைக்கான கூடுதல் ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு தாமதமாகும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் கூறியுள்ளது. இதன் காரணமாக, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயிலில் முன்பதிவு பதிவு செய்யாதவர்கள் சிறப்பு ரயில்களுக்காக தொடர்ந்து காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் இருக்கை, படுக்கை வசதிகள் முன்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு முக்கிய ரயிலிலும் 300 பயணிகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.

பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், பண்டிகைக் காலங்களில் தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுதோறும் எழுப்பப்படுகிறது. மேலும் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு தாமதமாகவே சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டு வருகிறது.

வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் பெட்டிகள் ஒரு சில நாள்களுக்கு ரயில்வே பராமரிப்புப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அந்தக் காலி ரயில் பெட்டிகள்தான் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்வே துறை புதிய வழித்தடத்தில் ரயிலை இயக்க வேண்டும் என்றால், அந்த வழித்தடத்தில் முதலில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கும். இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடையே உள்ள வரவேற்பு குறித்து ஆராயப்படும். அந்த வழித்தடத்தில் இயக்கியதால் கிடைத்த வருமானம் உள்ளிட்ட தகவல்களும் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்படும். அதிக வருமானம் இருந்தால் மக்களிடையே வரவேற்பு உள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிந்து கொள்ளும். ஆனால்,சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வரவேற்பு இருந்தும் நிரந்தர ரயில்களாக அறிவிக்கப்படுவது இல்லை என்பது ஒரு வருத்தமான செய்திதான்.

ரயில் பெட்டிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு தாமதமாகிறது என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளிர் காலச் சிறப்பு ரயில்கள் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், எப்படி பொங்கல் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பை வெளியிடுவதென தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

மேலும், சபரிமலைக்கு மகரவிளக்கு பூஜை வரையிலும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பணிமனையில் பெட்டிகள் இல்லாமல் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடும் தெற்கு ரயில்வே நிர்வாகம், தமிழகத்தின் முக்கியப் பண்டிகையான பொங்கலுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை.

பொங்கல் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் எனத் தெரியாது. ஆனால், அதற்கான முயற்சிகளை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

English Summary : Chennai Special train Notification for Pongal still not announced due to lack of coaches.