India-post-ATM2116சென்னையில் வங்கிகள் போலவே தபால் நிலையங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக ஏ.டி.எம் சேவை ஆரம்பித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் அண்ணா சாலை, தியாகராயநகர், மயிலாப்பூர், பரங்கிமலை மற்றும் தாம்பரம் ஆகிய தபால் நிலையங்களில் இந்த ஏ.டி.எம் சேவை ஏற்கனவே சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில் மேலும் மூன்று தபால் நிலையங்களில் இந்த ஏ.டி.எம் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வட்டார (நகரம்) போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் ஏராளமான தபால் நிலையங்களில் ஒருங்கிணைந்த வங்கி சேவை வசதிகள் (கோர் பேங்கிங்) தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள 572 தபால் நிலையங்களில் 510 தபால் நிலையங்களில் இந்த வசதி உள்ளது. முதல் கட்டமாக அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் ஏ.டி.எம். வசதி தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் தபால் துறைக்கு சொந்தமான 171 ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இவற்றில் 15 ஏ.டி.எம். எந்திரங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் இம்மாதம் (ஜனவரி) கூடுதலாக 19 ஏ.டி.எம். எந்திரங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் அண்ணா சாலை, தியாகராயநகர், மயிலாப்பூர், பரங்கிமலை மற்றும் தாம்பரம் ஆகிய 5 தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம். வசதி உள்ளது. சென்னை பொது தபால் நிலையம், அம்பத்தூர் தலைமை தபால் நிலையம் மற்றும் ஆவடி கேம்ப் தலைமை தபால் நிலையங்களில் ஜனவரி 1 முதல் ஏ.டி.எம். வசதி தொடங்கப்பட்டுள்ளது.

புது கணக்குகள் தொடங்குவதற்கு, ஏ.டி.எம். கடன் அட்டைகள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்கு வசதியாக, ‘எக்ஸ்பிரஸ் சேவை கவுண்ட்டர்கள்’ பிரத்யேகமாக மேற்கண்ட தபால் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த நவீன சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

English Summary:3 more ATMs at post offices in Chennai .