இந்தியாவிலேயே முதல்முறையாக ஏசி மற்றும் பயோ டாய்லெட் வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலை ஐசிஎப் பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கடந்த 1993ஆம் ஆண்டு ஐசிஎப் நிறுவனத்தில் முதன்முதலாக 700 குதிரை திறன் கொண்ட மின்சார ரயில் தயாரிப்பு தொடங்கப்பட்டது. அதன்பின்னர் 2000ஆம் ஆண்டு வரையில் இதுபோன்ற 50 ரயில்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் 1400 குதிரை திறன் கொண்ட மின்சார ரயில் தயாரிப்பு தொடங்கப்பட்டு, தற்போது வரையில் 137 ரயில்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக ஏசி மற்றும் பயோ டாய்லெட் வசதி கொண்ட மின்சார ரயில் தற்போது சென்னை ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் உள்ள 8 பெட்டிகளில் 2 பெட்டிகளில் ஏசி வசதி இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் வரிசைக்கு 5 சொகுசு இருக்கைகள் வீதம் 73 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் பயோ டாய்லெட் வசதி அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

English Summary: India’s First AC with Bio Toilet accommodated Trains to be introduced in Chennai, ICF.