சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பாதையில் 24 கி.மீ சுரங்கப் பாதையாகவும், 21 கி.மீ. உயர்மட்ட ரயில் பாதையாகவும் அமைக் கப்படுகின்றன.

இந்நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து சைதாப்பேட்டை வரையான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள ரஷ்ய நிறுவனமான மாஸ்மெட்ரோ, இந்திய நிறுவனமான கேமன் ஆகியவை இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணியை கேமன் நிறுவனமும் சுரங்கம் தோண்டும் பணியை மாஸ்மெட்ரோ நிறுவனமும் பிரித்து செய்து வந்த நிலையில், திடீரென மாஸ்மெட்ரோ நிறுவனம் சுரங்கம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ரஷ்யாவுக்கு சென்றுவிட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘அரசினர் தோட்டம் முதல் சைதாப்பேட்டை வரை சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இருபுறமும் 3.25 கி.மீ. தொலைவுக்கான பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இதற்கிடையே இரு நிறுவனங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் மாஸ்மெட்ரோ நிறுவனம் திடீரென வெளியேறிவிட்டது. எனவே, மீதமுள்ள பணியை கேமன் நிறுவனம் தொடர்ந்து செய்ய உள்ளது. மொத்தப் பணிகளையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

English Summary: Russian Company suddenly walks out from Chennai Metro Train Project.