பண்டிகை காலங்களில் ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே துறை பல்வேறு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வரும் நிலையில் தற்போது ‘தத்கல் சிறப்பு ரயில்’களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணத்தில் இருந்து ரூ.175 முதல் ரூ.400 வரை கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும் ஆனால் இந்த தத்கல் சிறப்பு ரயில், பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானத்தையும் தரவுள்ளது என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்த ரயில் குறித்து கூறியபோது, “இந்த ரயிலின் இரண்டாம் வகுப்பு அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், ஏசி பெட்டிகள் உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கான அடிப்படை கட்டணத்தில் 30 சதவீதமும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். இந்த ரயில்களில் சலுகை கட்டணம் கிடையாது. தத்கல் கோட்டா வசதியும் இல்லை.

இந்த ரயில்களுக்கான டிக்கெட்டுகளை ரயில்வே கவுன்ட்டர்களிலும் இணையதளம் மூலமாகவும் பெறலாம். மேலும், தத்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு கால விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இப்போதைய நிலையில் தத்தல் டிக்கெட், பயணம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், தத்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் குறைந்தபட்சமாக 10 நாட்களாகவும் அதிகபட்சம் 60 நாட்களாகவும் இருக்கும்.

தத்கல் சிறப்பு ரயில் டிக்கெட் நடைமுறை தொடர்பான சாப்ட்வேர் தயாராகி வருவதாகவும், இது தயாரானதும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் தத்கல் ரயில் சேவை தொடங்கும்” என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

English Summary: Takkal Special Trains to be announced shortly: Railway Ministry