கடந்த சில நாடுகளுக்கு முன்னர் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஜே.என்.யூ மாணவர் தலைவர் கன்னையா உள்பட 7 பேர் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை விவகாரம் தொடர்பாக, சென்னை பல்கலை கழகத்தில் கருத்தரங்கம், விவாதங்கள் நடத்தக் கூடாது என துறை தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும் சென்னை பல்கலையின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி சென்னை பல்கலையின் குற்றவியல் துறை மாணவர்கள் நடத்திய கூட்டத்தில், ஜே.என்.யு., விவகாரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து சில சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், ஜே.என்.யு., விவகாரம் தொடர்பாக, சிறப்பு கருத்தரங்குகளை நடத்த, சென்னை பல்கலையின் ஊடகவியல் மற்றும் அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக, பல்கலை நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ‘சென்னை பல்கலையின் எந்த துறையிலும், வளாகத்திலும், ஜே.என்.யு., விவகாரத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற அடிப்படையில் கருத்தரங்கம், போராட்டம் நடத்தக்கூடாது; அதற்கு அனுமதி அளிக்கவும் கூடாது’ என, துறை தலைவர்களுக்கு, பதிவாளர் டேவிட் ஜவஹர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English summary: Jeenyu not to discuss the issue. Madras University Outbreak Control