boatride29216சென்னை நகர மக்களின் பொழுதுபோக்கிற்காக ஏற்கனவே கடற்கரைகள், பூங்காக்கள், விலங்கியல் பூங்காக்கள், கோவில் குளங்கள் என ஏராளமான அம்சங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது சென்னை மாநகரின் இதயப் பகுதியில் இருக்கும் சேத்துப்பட்டில் உள்ள ஏரியில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடங்கிய இரு நாள்களிலேயே நூற்றுக்கணக்கானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். 16 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

16 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், நீர் பகுதி மட்டும் 6.9 ஏக்கர் ஆகும். அதோடு, படகு குழாம், தூண்டில் மீன்பிடிப்பு, ஊடக மையம், திறந்தவெளி அரங்கம், மகரந்த பூங்கா, மேல்தள உணவகம், கடலுணவு உணவகம், சிறுவர் விளையாட்டுப் பகுதி, நீரியியல் ஆய்வகம், நடைபாதை, பன்னடுக்கு வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு, மூலிகைச் செடிகள் பகுதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

காலை 9 முதல் மாலை 6 வரை திறந்திருக்கும் பூங்காவில் பெரியோருக்கு ரூ.25-ம், 14 வயதுக்குள்பட்டோருக்கு ரூ.10-ம் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று தளங்கள் கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தம் இங்கு அமைக்கப்பட்டுள்ளத்உ. இதில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தலாம். ஒரு மணி நேரத்துக்கு இரு சக்கர வாகனத்துக்கு ரூ.10-ம், மூன்று-நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.20-ம், வேன்களுக்க்உ ரூ.50-ம், பேருந்துகளுக்கு ரூ.100 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூங்காவுக்கு வருவோர் குளங்களில் மீன் பிடிக்கலாம். ஆனால் பிடிக்கும் மீன்களை மீண்டும் குளத்திலேயே விட்டுவிட வேண்டும். இதற்காக, மீன்பிடி பயிற்றுநர்கள் மீன்பிடிக்க விரும்புவோருக்கு பயிற்சி அளிப்பதோடு, ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூங்கா குளத்தைச் சுற்றிலும் 1.8 கி.மீ.க்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நாள்தோறும் காலை 4.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 7.30 மணி வரை நடைபயிற்சிக்காக அனுமதிக்கப்படுவர். இதற்காக நடைபயிற்சிக்கு மாதம் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மூலிகைச் செடிகள் வளர்த்து, இயற்கை சூழலை மேம்படுத்த பட உள்ளன. தற்போது, நூற்றுக்கணக்கானோர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் படகு சவாரி செய்தல் படகு குழாமில் துடுப்பு, மிதித்தல் ஆகியவற்றுக்காக 10 படகுகள் உள்ளன. துடுப்பு படகில் ஏரியில் சுற்றி வர வழிகாட்டியும் உள்ளார். அதேபோல் மிதிபடகில் வழிகாட்டி இல்லாமலும் சவாரி செய்யலாம். சவாரி செய்யும்போது உயிர் பாதுகாப்பு கவசம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். 30 நிமிடங்கள் சவாரி செய்ய பெரியோருக்கு ரூ.50-ம், சிறியோருக்கு ரூ.25-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு நாள்களில் 800-க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர். இதில், குழந்தைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்துள்ளனர். இனிமேல் படகு சவாரி செய்ய ஊட்டிக்கோ அல்லது முட்டுக்காட்டுக்கோ செல்ல வேண்டியதில்லை. சென்னையிலேயே படகு சவாரி செய்யலாம்.

English summary: Chetpet boat ride in the heart of Chennai. The public interest