பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்பட ஐந்து பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படுகின்றது. நேற்று முதல் நாளிலேயே 530 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் ஆறு அரசு ஆயுர்வேதிக் கல்லூரிகள் உள்ளன. அவை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி என்பவைகள் ஆகும். இந்த ஆறு கல்லூரிகளும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதேபோல 5 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 8 தனியார் ஓமியோபதி கல்லூரிகள் 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 20 தனியார் கல்லூரிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. 6 அரசு கல்லூரிகளில் 336 இடங்களும் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்களும் உள்ளன.
இந்நிலையில் 2015 – 2016-ம் கல்வி ஆண்டிற்கு சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.என்.ஒய்.எஸ், பி.எச்.எம்.எஸ்) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை 6 அரசு கல்லூரிகளில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
முதல் நாளான நேற்று சுமார் 530 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. வரும் 24ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விற்பனை நடைபெற உள்ளதாகவும், விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தி மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி (அருந்ததியினர்), எஸ்டி ஆகிய பிரிவினர் சுய சான்றொப்பமிட்ட சாதி சன்றிதழின் நகல் மற்றும் பிளஸ்2 மதிப்பெண் நகல் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து வரும் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை www.tnhealth.org என்ற சுகாதரத்துறையின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
English Summary : July 31st is the last date to submit applications for Siddha and Ayurveda courses.