இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் வரும் ஜூலை 1 முதல் தொடங்கவிருப்பதாக ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சுமார் 15 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்காக 3500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ஆம் தேதி ஏற்கனவே வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ஆன்லைனில் மாவட்ட அளவில் நடத்தப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின்படி இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மாவட்ட அளவிலான ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

English Summary : Counselling for secondary teacher training course starts tomorrow.