சென்னை மாநகர் மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டதால், இதுகுறித்து ஆந்திர அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அதிகாரிகள் ஐதராபாத் விரைந்துள்ளனர்.
சென்னை நகருக்கு ஆண்டுதோறும் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து 12 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கும் இந்த கிருஷ்ணா நீர், 2015ஆம் ஆண்டில் இதுவரை 4.7 டிஎம்சி மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மழை குறைவு மற்றும் வறட்சி போன்ற காரணங்களை காட்டி ஆந்திர பொதுப் பணித் துறையினர் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதிக்கு பிறகு தண்ணீரை முற்றிலும் நிறுத்திவிட்டனர்.
தமிழகத்துக்குத் தரவேண்டிய கிருஷ்ணா நீரைத் திறந்துவிடும்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ள நிலையில் இதுகுறித்து ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் நேற்று ஐதராபாத் விரைந்துள்ளனர்.
தற்போது கிருஷ்ணா நதிநீரை திறந்தால் ஆந்திர விவசாயிகள் முறைகேடாக தமிழகத்திற்கு வரும் தண்ணீரை உறிஞ்சி விவசாயத்திற்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே ஒரு வாரகாலத்துக்குப் பிறகு நதிநீரை திறப்பதாகவும் ஆந்திர அதிகாரிகள் தமிழக அதிகாரிகளிடம் கூறியுள்ளதாகவும் எனவே அடுத்த வாரம் முதல் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்படும் எனவும் கூறப்படுகிறது.
சென்னை ஏரிகளில் தற்போதுள்ள நீர் இருப்பை வைத்து ஜூன் மாதம் வரை சமாளிக்கலாம் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Chennai Officials started to Hyderabad regarding Krishna River stopped issue.