என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வசனத்தை, தொடர்ந்து என்னை பரிகாசம் செய்வதாக விஜய் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை:
விஜய் தொலைகாட்சியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியில், நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பேசிய, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வசனத்தை, தொடர்ந்து என்னை பரிகாசம் செய்யும் வகையிலும், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் ஒளிபரப்பியதற்காக சட்டபடி என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்து, எனது வழக்கறிஞர் மூலம் விஜய் தொலைகாட்சிக்கு சட்ட அறிக்கை அனுப்பி உள்ளேன். முதல் முறை அது ஒளிபரப்பப்பட்ட பொழுது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேடிக்கையாகவே எடுத்துக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் பெரிதும் பிரபலமாகவே, அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து சில தனியார் தொலைகாட்சியில் நிகழ்ச்சி நடத்த நான் பேச்சு வார்த்தை செய்தேன். அதில் இதற்கு காரணமான விஜய் தொலைக்காட்சியும் அடங்கும். இருந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி சுவராசியமான நிகழ்ச்சியின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அலச வேண்டும் என்பதே எனது முதல் நோக்கமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து இதே வசனம் பல்வேறு திரைப்படங்களிலும், வேறு வேறு நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது மட்டுமல்லாமல் மிக உச்சமாக ரஜினிமுருகன்’ திரைப்படத்தில், இதே வசனத்தை பல்லவியாக வைத்து பாடலும் உருவாகி இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நானும் என் குடும்பத்தினரும் பொது இடங்களிலும் சமூக வலை தளங்களிலும் பல்வேறு பின் விளைவுகளையும், விரும்பதகாத சூழலையும் சந்திக்க நேர்ந்தது. இப்படிபட்ட தொடர் பிரச்சனைகளால் இந்த வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது? எதற்காக சொல்லப்பட்டது? என்பதை மிக வலியோடு ஒரு வீடியோ பதிவின் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு சிறிதுசிறிதாக இந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கின. இப்படிபட்ட சூழலில் இப்பிரச்சனையை மீண்டும் தூண்டும் வகையில் விஜய் தொலைக்காட்சி மறுபடியும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா-பகுதி2’ என்ற ஒரு விளம்பர ப்ரோமோவை வெளியிட்டது. இதை மிக எதேச்சியாக01-10-2015ஆம் தேதி பார்க்க நேர்ந்தது. இது மீண்டும் எனக்கு விரும்பத்தகாத வகையிலும் அத்து மீறுவதாகவும் இருக்கிறது. மீண்டும் இந்த பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்து என்னால் சந்திக்கவோ விளக்கவோ என்னுடைய பரபரப்பான வேலைகளும், உடல்நிலையும் இடம் கொடுக்கவில்லை.
விஜய் தொலைகாட்சியின் பொது மேலாளர் திரு.ஸ்ரீராம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாக நான் கமிஷ்னரை அணுகி புகார் அளித்தேன். இது குற்றவியல் வழக்கு சார்ந்தது அல்ல என்பதால் அவர்கள் என்னை நீதிமன்றம் மூலம் சட்டப் பூர்வமாக இதை அணுகுமாறு கூறினார்கள். இதனைத் தொடர்ந்து எனது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அனுப்பி உள்ளேன். அதற்கும் பதில் வரவில்லை என்றால் விஜய் தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டிய சூழல் ஏற்படும்.
பின் குறிப்பு: ஒரு பிரபல வார இதழ் விஜய் தொலைக்காட்சியிடம் பேசிய பொழுது மட்டும்தான் இது குறித்து அவர்கள் பதில் அளித்தார்கள். முதல் முறை ஒளிபரப்பபட்டதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் அவர்கள் மறுபடியும் செய்ததாக தங்கள் தரப்பினை நியாயப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முறை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக மறுபடியும் மறுபடியும் செய்து எல்லை மீறுவது எந்த விதத்தில் நியாயம்? இன்னொரு பதிலும் அளித்து இருக்கிறார்கள். நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பாக நாங்கள் ‘இந்த நிகழ்ச்சி யார்மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ஒளிபரப்பபடவில்லை’ என்று குறிப்பு போடுகிறாமே என்றார்கள். அப்படி பார்த்தால் குறிப்பை போட்டு விட்டு யாரை வேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம் என்று சொல்கிறார்களா?
ஒரு தனி நபராக இருந்து கொண்டு தொலைக்காட்சி நிறுவனத்திடம் அதிலும் செல்வாக்கு மிகுந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் போராடுவது கடினம்தான். ஆனால் அதை பற்றியோ அல்லது இறுதி முடிவுகளை பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள நான் போராடுவேன். அனைவருடைய ஒத்துழைப்பிற்கும்நன்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.English summary-Actress Lakshmi Ramakrishnan sent a notice to vijay tv