ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு சென்று வரும் நிலையில் இவ்வருடத்திற்கான ஜெருசலேம் புனித பயணத்திற்கு செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டு இருப்பதாவது;-

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நபர் ஒருவருக்கு அரசு நிதி உதவித் தொகை ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இப்புனித பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

இப்புனித பயணம் மார்ச் முதல் ஜூன் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்/குடும்பத்தினர்/பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவ மதத்தவராக இருத்தல் வேண்டும். இதற்கு ஆதாரமாக கல்வி நிறுவனம் வழங்கியுள்ள மாற்றுச் சான்றிதழ் அல்லது திருமுழுக்கு சான்றிதழ் அல்லது தாசில்தார் சான்றிதழ் தரப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருந்து அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அரசு வழங்கும் நிதி உதவி நீங்கலாக மீதமுள்ள தொகையை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். ஓரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் செய்யலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம்.

70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அவருக்கு துணையாக அவர் விரும்பும் ஒரு நபர் அனுமதிக்கப்படுவார்.

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் ஜெருசேலம் புனிதப்பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கூடாது. மாவட்ட வாரியாக கிறித்தவ மக்கட்தொகையின் அடிப்படையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் கூர்ந்தாய்வு குழுவினரால் பயனாளி தெரிவு செய்யப்படுவர்.

பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். பயணம் சென்னையில் தொடங்கி சென்னையில் முடியும். ‘‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’’ என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5-வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary : Last date to apply for the pilgrimages to Jerusalem was announced.