எல்.ஐ.சி என்னும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பங்குச்சந்தையுடன் இணைந்த பல காப்பீடு திட்டங்களை கடந்த சில வருடங்களாக அறிமுகப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதியதாக பங்குச் சந்தையுடன் இணையாத “ஜீவன் ஷிகர்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டம் குறித்து அண்ணா சாலையிலுள்ள எல்.ஐ.சி. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: பங்குச் சந்தையுடன் இணையாத புதியத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும், “ஜீவன் ஷிகர்’ திட்டம் திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 6 வயது முதல் 45 வயது வரை உள்வர்கள் சேரலாம். லாபத்தில் பங்கு, சேமிப்பு, பாதுகாப்பை வழங்கும் ஒற்றைப் பிரீமிய திட்டமாகும். இந்தப் பிரீமியத்தில் பத்து மடங்கு இறப்பு உரிமமாக அளிக்கப்படும். குறைந்தபட்ச ஒற்றை பிரீமீயம் 6 வயது நபருக்கு ரூ.40,662-ம், 45 வயதினருக்கு ரூ.69,724-ம் செலுத்த வேண்டும்.

குறைந்தபட்ச முதிர்வுத் தொகை ஒரு லட்சமாகும். அதிகபட்ச முதிர்வுத் தொகைக்கு வரம்பு இல்லை. புதியத் திட்டம் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின்னர், ஜீவன் ஷிகர் திட்டத்தில் இணைய முடியாது. செலுத்திய பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகையும், முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கும் உண்டு.

ஒற்றைப் பிரீமியத் தொகையையும், முதிர்வு காப்புத் தொகையையும் காப்பீட்டுத்தாரரே தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. மேலும் பாலிசி வழங்கிய தேதியிலிருந்து 3 மாதங்கள் அல்லது இலவச பார்வைக் காலம் முடிந்த பின் (இவற்றில் எது அதிகமோ) பாலிசி காலத்தில் கடன் பெறும் வசதியும் உண்டு. ஜீவன் ஷிகர் திட்டம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி, முகவர்கள், அலுவலகங்களை அணுகலாம்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறியுள்ளது.

English Summary : Life Insurance Corporation of India (LIC) is launching ‘Jeevan Shikhar’, a closed-ended plan which would be open for sale for 3 months.