தமிழகத்தில் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் பெறுபவர்கள், ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மின் முறைகேட்டை தடுக்கலாம் என விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதில், முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்போர், பிற மோசடிகளில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்கவே இந்த ஆதார் எண்ணை மின் நுகர்வோர்கள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.