சென்னை மெரீனா கடற்கரை யில் சுமார் 2,500 கடைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் கடைகள் தொடர்ந்து அதிகரிக்காமல் தடுக்கவும், இஷ்டத்திற்கு கடைகள் இருப்பதால், ஒரே வரிசையில் அமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த மே மாதம், மூன்று வரிசைக்குள் கடைகளை மாநகராட்சி அமைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக, மீண்டும் அப்பகுதியில் முறையற்ற வகையில் கடைகள் புதியதாக முளைத்தன.
இதனால் சென்னை தேனாம்பேட்டை மண்டல அதிகாரிகள், பொக்லைன் உள்ளிட்ட கருவிகளுடன் நேற்று காலை கடற்கரைக்கு வந்து, கடைகளை முறைப்படுத்தி, ஒரே வரிசையில் அமைக்கலாம் என, வியாபாரிகளிடம் கூறினர். அதற்கு, ‘எங்களுக்கு அவ்வாறு கடை அமைத்தால், வியாபாரம் பாதிக்கிறது’ என, வியாபாரிகள் கூறியதோடு மாநகராட்சியின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்ததால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் உயரதிகாரிகளுடன் வியாபாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், வியாபாரிகளுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து, கடைகளை முறைப்படுத்த முடிவு செய்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து திரும்பி சென்றனர்.
மெரீனா கடற்கரை கடைகளை முறைப்படுத்துவதில், முந்தைய மத்திய வட்டார துணை கமிஷனர் அருண்சுந்தர் தயாளன் உறுதியாக இருந்தார். வியாபாரிகள் கடும் எதிர்ப்பை மீறி, கடற்கரையில் களத்தில் நின்று, கடைகளை முறைப்படுத்தினார். சமீபத்தில் தேர்தல் கமிஷன் உத்தரவால், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் பணிமாற்றமாகும் வரை, முறையாக இருந்த மெரீனா கடைகள், தற்போது பழைய நிலைக்கு வந்துவிட்டன. குப்பை அகற்றுவதில் உள்ள சிக்கல், புதிய கடைகள் அதிகரித்தால் இன்னும் வியாபாரம் பாதிக்கும் சூழல் ஆகியவற்றை புரிந்து கொண்டு, மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு, வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
English Summary : Marina Shop owners resist to arrange shops in a row at Marina beach.