தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பங்கள் கடந்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி மே 9ஆம் தேதி அதாவது வரும் திங்கள்கிழமை முதல் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கவுள்ளது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய தகுதிகாண் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானதாக கருதப்பட்ட நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வு தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை வழக்கம்போல் பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. மருத்துவக் கவுன்சில் பரிந்துரையை ஏற்கும் முடிவு குறித்து வரும் திங்கள்கிழமை (மே 9) சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவ தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விநியோகம் செய்யக்கூடாது என்று தேர்வுக் குழுவுக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை. அதனால் ஏற்கெனவே அறிவித்தபடி, மே 9-ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
English Summary : MBBS application will be distributed on May 9th as scheduled.