மருத்துவ படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி முதல்கட்ட நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொது நுழைவுத்தேர்வு குறித்த அறிவிக்கை தமிழக அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இன்று தமிழக அரசு மற்றும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிரி தனது வாதத்தில் கூறியதன் சாரம்சம் பின்வருமாறு:
கடந்த 2007-ம் ஆண்டிலேயே தமிழக அரசு தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை குறித்த சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 2009-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்த அறிவிக்கையை வெளியிட்டது.
இது மருத்துவ கவுன்சிலின் சட்டத்துக்கு உட்பட்டது. இந்த அறிவிக்கை தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. அப்படி தமிழக அரசின் சட்டத்தை மீறி மருத்துவ கவுன்சில் சட்டத்தின் அடிப்படையில் வெளியிட்ட அறிவிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால், மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் தமிழக அரசின் சட்டத்தை மீறி செயல்படும் வகையில் அமைய முடியும்.
மருத்துவ கவுன்சில் அறிவிக்கைக்கு எதிராக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த அறிவிக்கை மீது தடையும் பெற்றுள்ளது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிக்கையின்படி நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
தமிழக அரசின் வழக்கறிஞரின் வாதத்தை தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துபூர்வமான வாதத்தை ஒரு பக்க அளவில் அனைத்து மாநிலங்களும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
English Summary : Medical Council’s notification cannot binding us. Tamil Nadu government argued in Supreme Court.