ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் நடத்தும் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளதாகவும், இதில், 8 ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கல்வி கண்காட்சி 17வது ஆண்டாக இந்த ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் மே 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்வியைக் கற்பிக்கும் 8 முன்னணி ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சி, இரண்டு தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்கு எவ்வித நுழைவுக் கட்டணமும் எதுவும் கிடையாது.

12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பிக்கும் மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை இந்த கண்காட்சியிலேயே வழங்கப்படும். இந்தக் கண்காட்சியை, தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பின் துணைத் தூதரகம் மற்றும் ரஷிய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ‘ஸ்டடி அப்ராட்’ ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

சென்னையை அடுத்து மதுரையிலும் வரும் 9ஆம் தேதி இந்த கண்காட்சி மதுரை ரெசிடென்சியில் நடைபெறும் என்றும் அதனையடுத்து திருவனந்தபுரம், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களிலும் இந்த ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள்து.

பொறியியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட ரஷிய கல்வி நிறுவனங்களில் அதிக கட்டண சலுகை அளிக்கப்படும் படிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைக்கழகங்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, திறமை அடிப்படையில், நேரடி கலந்தாலோசனை மற்றும் உடனடி சேர்க்கை வாயிலாக மாணவர்களை சேர்க்கின்றன. ரஷ்யாவில் பல்வேறு கல்வி நிலையங்களில் அளிக்கப்படும் 400 மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 5 இடங்களுக்கு முழு கல்வி உதவிதொகை வழங்கப்பட உள்ளது.

இக்கண்காட்சி மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற முன்தகுதி தேர்வுகள் எழுதத் தேவையில்லை. ரஷியாவில் உள்ள 57 அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவை. மேலும் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ பள்ளிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சி குறித்து ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் மைக்கேல் ஜே.கோர்படோவ் கூறியபோது, “பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் ரஷியாவிற்கு இடையே சுமுகமான உறவு உள்ளது. இதனால் இரு நாடுகளும் பயன்பெற்று வருகின்றன. விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல், தொழில் நுட்பம், உயிரி வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இந்த பதவிகளுக்கு ரஷியாவில் உயர்கல்வி பெற்ற இந்திய மாணவர்கள் பொருத்தமானவர்களாக இருப்பர். இரு நாடுகளிலும் அவர்கள் பெற்ற கல்வி மற்றும் அனுபவம் இந்த உறவை மேம்படுத்தி முன்னேற்றம் காண உதவும்’ என்று கூறினார்.

English Summary : Russian Education Exhibition in Chennai on May 7th and 8th.