மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல சமூக அமைப்புகள் முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் சென்னை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நடத்தும் உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகத்திற்கு பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆதரவு தந்துள்ளனர்.
ஓரியன்டல் குசின்ஸ் நிறுவனத்தின் ஆதரவோடு, “பான்யன்’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்த உணவகம் நேற்று முதல் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் “பான்யன்’ நிறுவனத்தில் தங்கியுள்ள 10 முதல் 20 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பணியாற்றுகின்றனர்.
நேற்று இந்த உணவகத்தின் திறப்பு விழா மிகச்சிறப்புடன் முடிந்தபின்னர் இந்த உணவகம் குறித்து “பான்யன்’ அமைப்பின் நிறுவனர் வந்தனா கோபிகுமார் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களையும் சமுதாயத்தினரோடு பழகவிடுதல், உற்பத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டுதல், தன்னம்பிக்கையை அதிகரித்தல் ஆகிய காரணங்களுக்காக உணவகத்தில் பணியாற்ற ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
‘ஓரியன்டல் குசின்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் எம்.மகாதேவன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் இயங்கும் இந்த உணவகம் அவர்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் மாற்றும் ஒரு சிறிய முயற்சி என்று அவர் தெரிவித்தார்.
English Summary : With the help of Oriental cuisine and “Panyan” Company a restaurant has been opened for mentally challenged women’s near Kovalam sea shore.