108 திவ்யதேசங்களில் 5 திவ்யதேசத்து பெருமான்கள் ஒருங்கே அமைந்துள்ள திருக்கோவில் என்ற பெருமையை பெற்ற சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 12ஆம் தேதி பெரும் சிறப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து இந்த கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய 5 திருமாலின் அவதாரங்களும் அமைந்துள்ள இந்த கோவில், 8ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது.

இந்த கும்பாபிஷேகம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பார்த்தசாரதி கோவிலில் 1938ஆம் ஆண்டுக்கு பிறகு 1975, 1992 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் கடந்த ஜனவரி 26ஆம் தேதி பாலாலயத்துடன் தொடங்கின. இதில் மூலவர் விமானத்தில் பொறுத்தப்பட்டிருந்த முலாம் பூசப்பட்ட தங்க தகடுகள் பிரிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பொறுத்தப்பட்டு உள்ளது.

கோவில் மண்டபங்கள், மற்றும் சன்னிதிகளில் மழைநீர் கசிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கையும், நவீன வகையில் இயற்கை மூலிகை மூலம் சுத்தப்படுத்தும் பணியும் முடிவடைந்து உள்ளன.

சுவர்களில் வளர்ந்திருந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டதுடன், மீண்டும் வளராமலும் தடுக்கப்பட்டுள்ளது. கடல் காற்று, மழைநீர், வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் கரப்பான் பூச்சிகளால் கோவில் கோபுரங்கள், சுவர்கள் சேதமடையாமல் தடுப்பதற்காக நவீன ரக கருவிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டன. இங்கே கோபுரங்களும் மண்டபங்களும் தென்னிந்திய கோவில் கட்டிட கலைக்கே உரிய நுட்பமான சிற்ப கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வர்ணம் தீட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. வரும் 12ஆம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்து முடிந்து உள்ளது.

கும்பாபிஷேக தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

English Summary: Triplicane Parthasarathy Temple will be consecrated on June 12th.