சென்னையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ஒன்றான குரோம்பேட்டை ரெயில் நிலையம் மற்றும் தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் இருந்து வெளியே வந்தவுடன் சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி. சாலையை கடந்து செல்ல சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நடைமேம்பாலம் தானியங்கி படிக்கட்டுகளுடன் (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த இந்த எஸ்கலேட்டர், கடந்த 4 நாட்களாக செயல்படாமல் உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை வழங்காததால் தனியார் நிறுவனத்தினர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் அதனால் இந்த எஸ்கலேட்டர்கள் செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த இரு எஸ்கலேட்டர்களும் செயல்படாததால் குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் சானடோரியம் பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊழியர் சம்பள பிரச்சனையை விரைவில் முடித்து இவற்றை மீண்டும் இயக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary: Escalators in Tambaram and Chrompet Railway Stations need to Work Again. Peoples get more difficult without the escalators.