சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிலம் பெற்ற தொழில்முனைவோர், நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி பட்டா பெற, கிண்டி சிட்கோ அலுவலகத்தில் பிரத்யேக இ-சேவை மையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, சிட்கோ மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) கீழ் 130 தொழிற்பேட்டைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பேட்டையில் உள்ள பெரும்பாலான நிலம் சிட்கோ பெயரில் மாற்றப்படாமல் அரசு புறம்போக்கு என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததன் காரணமாக, தொழில்முனைவோரால் பட்டா பெற இயலவில்லை. இதனால் தொழில்முனைவோர் தங்களது தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில் சிரமம் இருந்து வந்தது.
இதற்கு தீர்வுகாணும் விதமாக கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, இத்தொழிற்பேட்டைகளின் நிலங்களின் வகைபாடு அரசு புறம்போக்கு என இருந்ததை ரயத்வாரி என மாற்றம் செய்ய தலைமைச் செயலர் தலைமையின்கீழ் அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின் பேரில் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்ட மனைகளுக்கு மட்டும் நிலத்தின் வகைபாடு ரயத்வாரி என மாற்றம் செய்யப்பட்டன. இதுவரை1490.46 ஏக்கர் நிலத்தின் வகைபாடு ரயத்வாரி மனை, ரயத்வாரி புஞ்சை என மாற்றம் செய்து சிட்கோ பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிட்கோ மூலம் கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழில் முனைவோருக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். அதன்பின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், 216 தொழில் முனைவோருக்கு பட்டாக்களை வழங்கினார்.