சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்து பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் சென்னை நகர பேருந்துகளில் மட்டுமின்றி விழுப்புரம் போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பயணிக்க அனுமதிக்குமாறு, கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வழங்கும் பேருந்து பாஸ் பயன்படுத்தி பள்ளிகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். ஒருசில வழித்தடங்களில் செல்லும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளிலும் மாணவர்கள் பயணிக்க வேண்டிய சூழ்நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது. ஆனால், பல நேரங்களில் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் நடத்துனர்கள் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பதால் சிக்கல் ஏற்படுகிறது.

கடந்த, 27ம் தேதி, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து தாம்பரம் புறப்பட்டு சென்ற, விழுப்புரம் போக்குவரத்து கழக பேருந்தில், பள்ளி சீருடையுடன் ஏழு மாணவர்கள் ஏறினர்.
அவர்கள், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வழங்கிய பஸ் பாஸ் வைத்திருந்ததால் ‘குறிப்பிட்ட பாஸ் விழுப்புரம் கழக பேருந்தில் செல்லாது’ எனக் கூறிய நடத்துனர், அவர்களை ஒன்றரை கி.மீ., துாரத்திலேயே இறக்கி விட்டார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, விழுப்புரம் போக்குவரத்து கழகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து, விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, விழுப்புரம் கழக பேருந்தில் ஏற்றிச் செல்ல அனுமதி உண்டு.
நடத்துனர்களை அழைத்து அறிவுறுத்துமாறு, தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பொன்னேரி, திருவள்ளூர் உள்ளிட்ட அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இனி மாணவர்களை ஏற்றிச் செல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

English Summary : MTC pass now valid in Vilupuram transports for students.