சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் ஐஐடி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேசிஜி பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்து அந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டி, ஐஐடி முன்னாள் மாணவர் தொழில்நிறுவன கூட்டு மையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, கேசிஜி பொறியியல் கல்லூரி, பிரதியுஷா கல்லூரி, பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகம், விஐடி, அக்னி தொழில்நுட்பக் கல்லூரி, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை இந்த போட்டியில் மிக அழகாக காட்சிப்படுத்தி அதற்கு விளக்கமும் அளித்தனர். இதில் கேசிஜி கல்லூரி மாணவிகளின் சூரிய சக்தியில் இயங்கும் எரிவாயுக் கசிவு கண்டுபிடிப்பு, கட்டுப்பாடு கருவிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களின் பிளாஸ்டிக் கழிவுப் பொருள் வெப்பச்சிதைவு உலை கண்டுபிடிப்புக்கு வழங்கப்பட்டது.
மூன்றாம் பரிசாக பிரதியுஷா கல்லூரி மாணவர்களின் வருங்கால எரிபொருள் ஹைட்ரஜன் என்ற கருத்திலான கண்டுபிடிப்பு பெற்றது.
English Summary : New Inventors Competition held at IIT Madras