தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 167 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கவுள்ளன. இந்த சிறப்பு முகாமில் தாய், சேய் நல மருத்துவம், கர்ப்பிணிகள், மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இருதயம், சிறுநீரகம், நரம்பியல், கண், மூக்கு, பல் உள்ளிட்டத் துறை குறைபாடுகளுக்கான பரிசோதனைகள் மற்றும், ஆலோசனைகளும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று முதல் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த சிறப்பு முகாம்கள் தமிழகத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் உள்பட 167 இடங்களில் நடத்தப்படும். இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அவர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள் என்றும் இந்த அரிய வாய்ப்பினை பெண்களும் குழந்தைகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

English Summary : Tamil Nadu Medical and Rural Welfare department sets a total of 167 special medical camps.