பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய மின்தூக்கி வசதி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இந்தப் பாதையில் திருமங்கலத்தில் இருந்து சென்ட்ரல் வரை சுரங்கப் பாதையில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் நுழைவு வாயிலில் புதிய மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ ரயில் நிலையங்களில் பொது மக்களுக்கு உலகத்தரத்தில் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 5 மட்டத்தில் மெட்ரோ ரயில்நிலையத்தை தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் நுழைவு பக்கத்தில் புதிய மின்தூக்கி தற்போது அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மின்தூக்கி, இரண்டு நகரும் படிக்கட்டு வசதிகளும் ஏற்கெனவே செய்து கொடுக்கப்பட்டுள்ளன.