சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இனிமேல் வெள்ளத்தில் தண்டவாளம் மூழ்கியதை கண்டுபிடித்து உடனே அருகில் உள்ள ரயில் நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கும் செய்யும் கருவி ஒன்றை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ‘வாட்டர் லெவல் மானிட்டரிங் சிஸ்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி, திருச்சி – மணப்பாறை இடையே உள்ள கோரையாறு ரயில்வே பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் செயல்பாடுகள் குறித்து தெற்கு ரயில்வேயின் தலைமை பொறியாளர்(பாலம்) சுயம்புலிங்கம் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘இக்கருவியின் மதிப்பு ரூ.10 லட்சம். மழை வெள்ளத்தில் தண்டவாளம் மூழ்கும் போது, ரயில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, இக்கருவி பயன்படும். தண்டவாளத்திற்கும், வெள்ளத்திற்கும் 10 செ.மீ., இடைவெளி இருக்கும்போது, உடனடியாக அந்த கருவி அதிகாரிகளுக்கு ‘எஸ்.எம்.எஸ்.,’ அனுப்பி எச்சரிக்கும்.
அதிகாரிகள் வருவதற்குள் வெள்ளப்பெருக்கு அதிகரித்தால், அக்கருவியில் அலாரம் ஒலித்து, எச்சரிக்கை விளக்குகள் எரியும். பின், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி, அங்கிருந்து ரயில் புறப்படாமல் இருக்க சிக்னலை ‘கட்’ செய்யும். இக்கருவி ‘ரீசார்ஜ்’ பேட்டரியால் இயங்கக்கூடியது. சூரியஒளி மூலம் ‘ரீசார்ஜ்’ செய்ய முடியும். தகவல்களை பதிவு செய்யும் வசதியும் உண்டு. விரைவில் வைகையாறு, தாமிரபரணி, பாலாறு தண்டவாளங்களிலும் இக்கருவி பொருத்தப்படும்.
இவ்வாறு சுயம்புலிங்கம் தெரிவித்தார்.
English Summary :Railway introduced a new tool to locate the sunken flooded tracks.