சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தினமும் 77 ஆயிரம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அவற்றை கியாஸ் சிலிண்டர் நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டுக்கே சென்று நேரடியாக வழங்கி அதற்குரிய பணத்தை பெறுகின்றனர்.
மேலும் சிலிண்டருக்குரிய பணத்துடன் அவர்கள் எடுத்துக் கொண்டு வந்ததற்கு மறைமுக சேவை கட்டணமாக கூடுதல் பணமும் பெறுகின்றனர். இது குறித்த புகார்கள் எண்ணை நிறுவனத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.
அதை தடுக்கவே ‘இ-வேலட்’ எனப்படும் ஆன்லைன் பணம் பரிவர்த்தனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளது. சிலிண்டர் ‘புக்’ பண்ணும் போது அதற்குரிய பணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு தகவல் அனுப்பப்படுகிறது. அதை ஒரு சில வினியோகஸ்தர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றனர்.
அனைவரும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இது பெயரளவில் மட்டுமே உள்ளது. எனவே அதை விரைவில் கட்டாயமாக்க எண்ணை நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளது
இது குறித்து சிலிண்டர் வினியோகஸ்தர்கள் கூறும் போது, “பல வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை விரும்பவில்லை. இதன் மூலம் கூடுதலாக பணம் எடுத்து விடுவார்களோ என அஞ்சுகின்றனர். அதே நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதலாக பணம் கேட்பதாகவும் எங்களிடம் புகார் செய்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
மேலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் பணம் உடனடியாக கிடைப்பதில்லை. இடையில் விடுமுறை நாட்கள் வந்து விட்டால் போதும் தங்களது கணக்கில் வந்து சேர 2 அல்லது 3 நாள் ஆகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக பணம் செலுத்தினால் தான் நாங்கள் சிலிண்டர்களை பெறும் நிலை உள்ளது. ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு அதற்கென்று தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். அது சரிவராது, என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்தியன் ஆயில் எண்ணை நிறுவனம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறையை விரைவில் கட்டாயப்படுத்துகிறது. அதற்காக கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களுக்கும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.