சுரங்க பொறியியல் படிப்பில் முதன்முதலாக மாணவிகளுக்கு அனுமதி கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்துறையில் பணிபுரியும் போது கடுமையான உடல் உழைப்பு தேவைப்படுவதால் இதுவரை பெண்கள் இந்த பணிக்கு அனுமதிக்கப்படவில்லை. அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் சுரங்க மேலாளராகவோ அல்லது திட்டத்துறை அதிகாரியாகவோ மட்டுமே பணிபுரிந்து வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவிகள் சுரங்கத்துறை பொறியியல் பட்டம் பெற அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாணவிகளிடம் பெருகிவரும் வரவேற்பை கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் இந்தத் துறையில் பெண்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சுரங்கப் பொறியியல் துறை கடந்த 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இத்துறைக்கு போதுமான ஆதரவு இல்லாததால் 1969ஆம் ஆண்டில் மூடப்பட்டது. பின்னர் மீண்டும், 1987ஆம் ஆண்டு முதல் இத்துறை ஆரம்பிக்கப்பட்டாலும், இந்த துறைக்கு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தியாவில் 20-க்கும் குறைவான அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமே இந்த படிப்பு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரே இளநிலை சுரங்கப் பொறியியல் துறை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்க பொறியியல் பட்டப்படிப்பில் இவ்வாண்டு முதல் மாணவிகள் அனுமதிக்கப்பட்டாலும், படித்து முடித்த பின்னர் பூமிக்கு அடியில் பணிபுரிய சுரங்கச் சட்டம்1952-ன் படி அவர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூமிக்கு மேலே உள்ள சுரங்கங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பெண்கள் பணிபுரிய சட்டம் அனுமதிக்கிறது.
English Summary: Anna University finally give permission for Girls to Join in Mine Engineering Course.