தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதி அதில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்திருந்தது. எனவே எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்புகளில் சேரும் மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்து வருகின்றனர்.

நேற்று மாலை வரை சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்புகைச் சீட்டில் உள்ள எண்ணைப் பயன்படுத்தியே விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவோ, மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவோ முடியும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி தினம் என்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை எட்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Today is the last date for +2 Revaluation and Retotalling.