ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அவசியம் தேவை என்று கருதப்படும் ஆதார் அட்டையை தற்போது நடமாடும் இ-சேவை மையம் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.
அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தமிழகத்தில் உள்ள 264 வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 339 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டு இந்த மையங்களில் தற்போது கட்டண அடிப்படையில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் சோதனை அடிப்படையில் ஒரு நடமாடும் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த சேவையை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங் கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரகுருபரன், “இ-சேவை மையங்கள் மூலமாக, ஆதாருக்கு பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவர்களுக்கு ரூ.40-க்கும், ஏற்கெனவே ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு ரூ.30-க்கும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதே சேவை தற்போது நடுமாடும் இ-சேவை மையத்தில் வழங்கப்படுகிறது. நடமாடும் சேவை மூலம் இதுவரை 3,331 பேருக்கு பிளாஸ்டிக் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கொடுத்திருந்த செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிவற்றை மாற்றும் சேவையும் ரூ.10 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அரசின் சேவையை மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்கும் கொள்கை அடிப்படையில், குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை வழங்க இருக்கிறோம்.
குறைந்தபட்சம் 300 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கான ஏற்பாடு செய்துவிட்டு, 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தெரிவித்தால், நடமாடும் இ-சேவை மையம், சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்கே வந்து அட்டைகளை வழங்கும். இந்த சேவையை சென்னையில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குமரகுருபரன் கூறினார்.
English Summary: Mobile E-Service Centers for Plastic Aadhar Card applications. We can apply Plastic Aadhar cards through mobile E-service centers throughout Tamilnadu.