சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமான்டி காலனியில் கடந்த சில வருடங்களாக பேய்கள் உலாவி வருவதாக வதந்திகள் அவ்வபோது தோன்றுவதுண்டு. இதுகுறித்து சமீபத்தில் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி’ என்ற திரைப்படமும் வெளிவந்து, அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. பொதுமக்களின் பயன்பாடு இல்லாமல் டிமாண்டி காலனியில் பல வருடங்களாக சிதிலமடைந்த நிலையில், அந்த பகுதியில் இருந்த வீடுகளை இடித்து வதந்தியை முற்றிலும் பொய்யாக்க சென்னை மாநகராட்சி அதிரடியாக முடிவு எடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தையும் கடந்த ஞாயிறு அன்று இடித்து தரைமட்டமாக்கியது.

டிமான்டி காலனியில் முன்பு வசித்த ஒரு சில மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் சிலரும் சேர்ந்து டிமான்டி காலனி சொத்தை முறைகேடாக கைப்பற்றவே வேண்டுமென்றே பேய்கள் குறித்த வதந்திகளை பரப்பிவிடுவதாக புகார் கூறப்பட்டு வந்ததை அடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த காலனியில் உள்ள வீடுகளை இடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து 123-வது வார்டு ஜான்சி ராணி கூறும்போது, “இங்குள்ள கட்டிடங்கள் இப்போதைக்கு இடிக்கப்படுகின்றன. ஆனால், இங்கு வேறு கட்டிடம் கட்ட அனுமதியோ, இல்லை காலனியை மீண்டும் உருவாக்க அனுமதியோ யாரும் கோரவில்லை” என்று கூறினார்.

இதற்கிடையில் டிமான்டி காலனி சொத்தை நிர்வகித்துவரும் சென்னை-மயிலாப்பூர் ஆர்ச்டயசிஸ் நிர்வாகிகளோ, டிமான் டிகாலனியை மீண்டும் உருவாக்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கத்தோலிக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தேவசகாயம் இதுகுறித்து கூறும்போது, “186 கிரவுண்ட் நிலம் கொண்ட டிமான்டி காலனி, ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த சொத்தை கையாள்வதில் நிறைய குளறுபடிகள் நிலவி வருகின்றன. அவற்றிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்” என்றார்.

English Summary: Chennai Corporation demolished the Demonte Colony to make rumors about ghosts in the Colony. Also Added, no plan of sale or build new building in the Colony.