சென்னை: பிளஸ் 2 தேர்விற்கான மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது

நடப்பாண்டு முதல் பிளஸ் 2 வகுப்பிற்கு மதிப்பெண்கள் 1200லிருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்பட மாட்டாது. உயர்கல்வி படிக்க பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே போதும். 11 ம் வகுப்பில்தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக மறுவாய்ப்பு வழங்கப்படும்.

11ம் வகுப்பு பாடங்கள் கடினமாக உள்ளது எனவும், 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து பொது தேர்வு காரணமாக மனஅழுத்தம் ஏற்படுகிறது என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்று வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துபள்ளிகளிலும் திங்கட்கிழமை முதல் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நீட் தேர்வு எழுத ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக 50 மாணவர்களை தேர்வு செய்திருக்கிறோம். 320 ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

413 மையங்களில் 4300 ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வை பொறுத்த வரையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன் கூட்டியே எடுத்து வருகிறது.

எதிர்காலத்தில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் போட்டி தேர்வுகளை சமாளித்து சேர தகுதிப்படுத்தப்படுவார்கள்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *