தமிழகத்தின் தென்கோடியில் உள்ள குமரி மாவட்டத்தின் ஒரு வாக்குச்சாவடியில் வெறும் 9 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஒன்பது வாக்காளர்களுக்காக 152 கி.மீ. தொலைவுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அலுவலர்கள் பயணம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மநாபபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியின் முதலாவது வார்டு வாக்குச்சாவடி மலை மீதுள்ள மேல்கோதையாறு மின் நிலைய ஊழியர் மனமகிழ் மன்றத்தில் உள்ளது. இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் 9 பேர் மட்டுமே. மின்நிலைய ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் இவர்களில் 6 பேர் ஆண்கள்; 3 பேர் பெண்கள்.
கீழ்கோதையாறிலிருந்து மேல் கோதையாறுக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் போக்குவரத்துக்காக கீழ் கோதையாறு மின்நிலையம்-1 அருகிலிருந்து வின்ச் இயக்கப்படுகிறது. இதன்மூலம் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டுசெல்ல முடியாததால் ஒவ்வொரு தேர்தலின்போதும், நாகர்கோவில், பணகுடி, களக்காடு, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சாலை வழியாக சுமார் 152 கி.மீ. தொலைவு பயணம் மேற்கொண்டு மேல்கோதையாறை அடைகின்றனர்.
மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, மே 15-ஆம் தேதி இந்த வாக்குச் சாவடிக்கு 2 ஜீப்புகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்லவுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 16 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 9 வாக்காளர்களாக குறைந்துள்ளனர். இம்மாவட்டத்தில் மிகக் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடி இதுவே. தமிழகத்தில் 100% வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளின்படி வாக்காளர்கள் எத்தனை உயரமான மலைப் பகுதியில் அல்லது தொலைவில் இருந்தாலும் அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையம் முனைப்புடன் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக இதை உதாரணமாக கொள்ளலாம்.
English Summary : Polling station for only 9 voters in Tamil Nadu.