நாடு முழுவதும் பொதுமக்கள் சூரிய மின்சக்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. சூரிய மின்சக்தியை பயன்படுத்துவோர்களுக்கு மானியம் உள்ளிட்ட சிறப்பு சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூரிய மின்சக்தியை சிறப்பான முறையில் பயன்படுத்தியதற்காக சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண இல்லத்துக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

புதுடெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இராமகிருஷ்ணா இல்லத்தின் செயலர் சத்தியஞானந்தர் மகராஜூ அவர்களுக்கு விருதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார். இந்த விழாவில் அமைச்சர் பேசியதாவது:

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சூரிய ஒளி சக்தி மூலம் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மூலம் இல்லத்தில் உள்ள 700 மாணவர்களுக்கு தினமும் சமையல் செய்யப்பட்டு வருகிறது.

சூரிய ஒளியை சிறப்பாகப் பயன்படுத்தி பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருவது பாராட்டத்தக்கது. சூரிய ஒளியை வெப்ப ஆற்றலாக மாற்றுவதில் உலக நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த வெப்ப ஆற்றலை சிறு, பெருந்தொழிற்சாலைகள் பயன்படுத்தும்போது, மரபு எரிசக்தியின் தேவை குறைத்து உலகம் வெப்பமயமாதலை தடுக்க முடியும். எரிசக்திக்கான செலவுகளையும் குறைக்க முடியும்.

நாட்டில் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. சூரிய ஒளி பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் ஒரு ஆண்டில் 8 முதல் 10 பேருக்கு இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதைச் சொல்லித் தர வேண்டும் என்று பியூஷ் கோயல் கூறினார்.

இந்த விழாவில் துறைச் செயலர் உபேந்திரதிரிபாதி, இணைச் செயலர் தரூண் கபூர், யுனிடோ இந்தியாவுக்கான பிரதிநிதியும் இயக்குநருமான அய்யுமி பிஜினோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English Summary : Mylapore Ramakrishna Mission Students Home gets Award for best use of sunlight.