சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை இன்று முதல் தொடங்கவுள்ளது. ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய திட்டம் தொடங்கவுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளதாவது:
செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் மாபெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.
அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி அதாவது இன்று நடைபெறவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary : After Selvamagal Semippu Thittam Chennai postal department starts Ponmagan Semippu Thittam today.