சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை அடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் உலகளாவிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெகு சிறப்பாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில்,கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் மாநில அளவில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் 3500க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். முதலீட்டாளர்கள் சென்னையை சுற்றிப்பார்க்கவும், தொழில் பூங்காக்கள் மற்றும் தொழில் பேட்டைகளை சுற்றிப்பார்க்கவும் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது.

மாநாட்டுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநாட்டுக்கான அரங்க பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா, மாநாட்டுக்கான பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பி.தங்க மணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், தொழில்துறை செயலர் சி.வி.சங்கர், பள்ளிக் கல்வித்துறை செயலர் த.சபிதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

English Summary : Tamil Nadu Chief Minister Advisory for Global investors conference in Chennai on September 9th and September 10th.