இளம் நடிகர்களில் முன்னணி இடத்தை கைப்பற்றி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படக்குழுவினர்களை பாராட்டியதோடு படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். மேலும் சென்சார் அதிகாரிகள் படத்தில் உள்ள எந்த காட்சியையும் கட் செய்யாமல் முழுமையாக திரையிட அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்கள் ‘யூ’ சர்டிபிகேட் பெற்று ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படத்திற்கும் ‘யூ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ரஜினிமுருகன்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு இணையத்தில் வெளியானது. இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் இதுவரை அஜீத், விஜய் படங்களின் டிரைலர்கள் மட்டுமே அதிகாலையில் வெளியாகி வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலரும் அதிகாலை 12 மணிக்கு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, பேராசிரியர் ஞானசம்பந்தம், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது..

English Summary : Sivakarthikeyen’s Ranjini murugan film gets ‘U’ certificate.