மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்த நிலையில் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் 10.7 சதவீதம் வரை உயருகிறது.
இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்து வந்தன.
அதனை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் முதல் உயர்த்துவதற்கு மருந்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயருகிறது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது மருந்துகளின் விலையும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் ஏழை, எளிய மற்றும் மூத்த குடிமக்கள் தங்களது மாத பட்ஜெட்டில் மருந்துகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.