புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2023 ட்ராபி அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சாதனைத் தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களைக் கொண்டாடும் விதமாகவும் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டமான 2 ஆண்டுகளைத் தவிர்த்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த புதிய தலைமுறை தமிழன் விருதுகள் தற்போது 10 ஆவது ஆண்டை எட்டியுள்ளது.
இவ்விழா ஆகஸ்ட் 11 வெள்ளி மாலை 6 மணிக்கு, சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இன்று (04/08/23) விருதுக்கான ட்ராபி அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிய தலைமுறையின் செய்திப்பிரிவு ஆசிரியர் திருப்பதி வரவேற்புரையாற்றினார். செய்தி இயக்குநர் ஸ்ரீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். புதிய தலைமுறையின் Programming Head கார்மெல் தமிழன் விருதுகள் 2023 பற்றி உரையாற்றினார். செல்வக்குமார் மற்றும் மடோனா ஜனனி தமிழன் விருதுகள் 2023ன் கருப்பொருளை விளக்கினர்.
இந்நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான சேரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 ஆவது ஆண்டுக்கான தமிழன் விருதுகள் ட்ராபியை வெளியிட்டு சிறப்பித்தார்.