சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க தேதிகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது கலைக்கல்லூரிகளில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். முக்கியமாக அரசு கலைக்கல்லூரிகளில் மாணவிகள் சேர்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ராணிமேரி கல்லூரி, அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவிகள் சேர்வதற்கு அதிக அளவிலான விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர்.
பூர்த்தி செய்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பல கல்லூரிகளில் கவுன்சிலிங்கும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை ராணிமேரி கல்லூரியில் சேர்வதற்காக நேற்று ஆயிரக்கணக்கான மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து குவிந்தனர். ஒருசில மாணவிகளுக்கு இந்த கல்லூரியில் இடம் கிடைக்காததால் ஆதங்கப்பட்டு, கல்லூரி பேராசிரியர்களுடன் மாணவிகளும் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகம் தங்களை அலைக்கழிக்க வைப்பதாகவும், தங்களுக்கு விருப்பமான பாடத்துக்கான இடத்தையும் அளிக்க மறுப்பதாகவும், கல்வி கட்டணமும் அதிகமாக கேட்பதாகவும் மாணவிகள் புகார் கூறினார்கள். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இதுகுறித்து ராணிமேரி கல்லூரி முதல்வர் ரா.அக்தர்பேகம் கூறியதாவது:-
பி.ஏ, பட்டத்திற்கு தமிழ், ஆங்கிலம், ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், தெலுங்கு, இசை, சோசியாலஜி, சமஸ்கிருதம், வரலாறு மற்றும் பி.எஸ்,சி, பட்டத்திற்கு கணிதம், இயற்பியல், வேதியியல், பிளாண்ட் பயாலஜி, சுற்றுலா நிர்வாகம், விலங்கியல், கம்யூட்டர் சயின்ஸ், உடற்கல்வி போன்ற படிப்புகள் உள்ளன. இவற்றில் 1,300 மாணவிகள் மட்டும் சேர்க்க முடியும். ஆனால் இந்த ஆண்டு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
அனைவருக்கும் இடம் ஒதுக்கிவிட முடியாது. இருக்கிற இடத்தில் மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து வகையிலும் சிறந்த மாணவிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய நிலவரப்படி 3 கட்ட கவுன்சிலிங் மூலம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழ் பாடத்தில் ஒரு சில இடங்களும், சோசியலாஜி, புவியியல், வரலாறு பாடங்களில் மட்டுமே காலியிடங்கள் உள்ளன. அவையும் ஒரு சில நாட்களில் நிரம்பிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராணிமேரி கல்லூரியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றத்திற்கு உள்ளான மாணவிகள் பிற அரசு கல்லூரிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலைக்கல்லூரிகளில் மாணவிகளை சேர்ப்பதற்கே பெற்றோர்கள் மிகுந்த சிரமப்படுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
English Summary: More no of Students applied for Arts college this year. Queen Mary’s College for Women got 10 times more than seats available this year. Parents are more likely to join their girls in Arts College than Engineering College.