ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாள பராமரிப்பு பணி அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீடிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை – வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி மற்றும் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கியது.
இதனால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தவிர வாரத்தின் 5 நாள்களும் இப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த 5 நாள்களுக்கும் ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 2.15 மணிக்கு இயக்கப்படும் அரக்கோணம் பாசஞ்சர் ரயில் இயக்கப்படாது. அதே நேரத்தில் காலை 11.30 முதல் மாலை 4 மணி வரை ஜோலார்பேட்டையில் இருந்து, சென்னை மார்க்கமாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ஜோலார்பேட்டையில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை நிறுத்தப்பட்டு, தாமதமாக இயக்கப்படும். அதேபோன்று திங்கள், வெள்ளிக்கிழமைகளில் வழக்கம்போல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்பணி செப்டம்பர் 15-க்குள் முடிவடையும் என ஏற்கெனவே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வரை இப்பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.