சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள ரயில் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், கடற்கரை முதல் தாம்பரம் வரையுள்ள பகுதிகளில் புதியதாக மாம்பலம் மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் ரயில்வே போலீஸ் நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய ரயில்வே போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டவுடன், கடற்கரை முதல் இருந்து கோடம்பாக்கம் வரை எழும்பூர் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் வகையில் பிரிக்கப்படும். அதேபோல் கோடம்பாக்கம் முதல் மீனம்பாக்கம் வரை மாம்பலம் ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும்.
மேலும் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலும் திருவான்மியூர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டுக்குள் வரும் வகையில் பிரிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யவிருப்பதாகவும், பேரிடர் காலத்தில் பயணிகள் அழைத்த உடனே விரைந்து சென்று அவர்களுக்கு உதவ முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாம்பலத்தில் போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், திருவான்மியூரில் இடம் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
English Summary: New Railway Police Stations to started in T.Nagar and Thiruvanmiyur Railway Stations.