பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மழைக் கால முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மழைக் காலம் என்பதால் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கக்கூடிய பள்ளங்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தொட்டி, கழிவுநீர் மற்றும் கிணறுகள் திறந்தநிலையில் இல்லாமல் மூடி வைக்கவேண்டும்.
காலை வணக்கக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்கள் குறித்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்தவேண்டும்.
மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 செயல்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.