மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் அணுநாயகனுமான அப்துல்கலாம் பெயரில் செயல்பட்டு வரும் கலாமின் காலடிச்சுவட்டில்’ என்ற அமைப்பிற்கு பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளார்.
நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர், சமூக சேவையாளர் என புகழ்பெற்ற ராகவா லாரன்ஸ் இயக்கி சமீபத்தில் வெளிவந்த ‘காஞ்சனா 2’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தது. அதையடுத்து ராகவா லாரன்ஸ் வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா ஆகிய டைட்டில்களையுடைய இந்த படங்களின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் லாரன்ஸ், டி.சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படங்களை நடித்து இயக்குவதற்காக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து லாரன்சுக்கு அட்வான்சாக ஒரு கோடி ரூபாய் நேற்று பூஜை நடைபெறும் மேடையிலேயே கொடுக்கப்பட்டது. இந்த பணத்தை பெற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ், அந்த ஒரு கோடி ரூபாயையும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் செயல்படும் ‘கலாமின் காலடிச்சுவட்டில்’ என்ற பெயரில் இயங்கும் பசுமை திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த அமைப்பு ஏழை குழந்தைகளின் கல்விக்காக போராடி வருவதோடு, மரக்கன்றுகளை நடும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ‘லாரன்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பின்மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகளின் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Raghava Lawrence funded Rs.1 crore for Kalamin kalachuvadu organization.